kathir_book_releaseநூல் வெளியீட்டு நிகழ்வு

காலஞ்சென்ற எழுத்தாளர் செ.கதிர்காமநாதன் அவர்கள் எழுதிய ஆக்கங்கள் தொகுக்கப்பட்டு, ‘செ.கதிர்காமநாதன் படைப்புகள்’ என்னும் தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது. மேற்படி நூல் வெளியீட்டு நிகழ்வு கடந்த 17 ஆம் திகதி ஞாயிறு அன்று, ஸ்காபறோ விலேஜ் சென்ரறில் இடம்பெற்றது. முப்பது வருடங்கள் மட்டுமே வாழ்ந்த ஒரு தலைசிறந்த எழுத்தாளனின் படைப்புகள் நாற்பத்தி ஐந்து ஆண்டுகள் கழிந்த நிலையில், பல சிரமங்களுக்கு மத்தியில், பத்திரிகை காரியாலயங்கள், நூலகங்கள், ஆவணக் காப்பகங்கள், போன்றவற்றில் தேடி எடுக்கப்பட்டு, தொகுக்கப்பட்டு, இவ்வாரம் வெளியிட்டு வைக்கப்பட்டது. பதினேழு வயதில் எழுத ஆரம்பித்து, பதின்மூன்று ஆண்டுகள் அவர் எழுதிக் குவித்த படைப்புகள் 550 பக்கங்களை கொண்டதாக நூல்வடிவம் பெற்றுள்ளது. அவர் வாழ்ந்த குறுகிய காலப்பகுதியில் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் எழுதிய சிறு கதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புக் கதைகள் என்பன ஒரே தொகுப்பாக வெளிவந்துள்ளது.

kathir02

கரவெட்டி கலாச்சார மையம், தேடகம் கனடா ஆகியவற்றின் பங்களிப்போடும், பலரது இடைவிடாத முயற்சியினாலும் இந்த நூல் வெளிவந்திருக்கிறது. சிறந்த ஒரு இலக்கியவாதியின் படைப்புகள் காலத்தால் அழிந்துவிடக்கூடாது என்ற உயரிய நோக்கில், ஆவணமாக்கலின் அவசியத்தை உணர்ந்து செயல்பட்டதன் வெளிப்பாடே இந்தப் படைப்பு.

நூல் வெளியீட்டு நிகழ்வுக்கு தேடகம் அமைப்பின் அங்கத்தவர் எழுத்தாளர். அ. ஜெயகரன் அவர்கள் தலைமை ஏற்றிருந்தார். கவிஞர் அ. கந்தசாமி அவர்களும், எழுத்தாளர் அ. யேசுராசா அவர்களும் நினைவுரையாற்றினார்கள். அன்னாரின் சகோதரி திருமதி இந்திராணி அவர்கள் சிறப்புரையாற்றினார். அவர்களைத் தொடர்ந்து ஆசிரியர் அம்பிகாவரன், முனைவர் பார்வதி கந்தசாமி, செந்தாமரை ரவி, ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்.

நூலை அ. யேசுராசா அவர்கள் வெளியிட, முதற்பிரதியை முன்னாள் வட-கிழக்கு கல்விப் பணிப்பாளர் கந்தசாமி அவர்கள் பெற்றுக்கொண்டார். சிறப்புப் பிரதியை கதிர்காமநாதன் அவர்களின் மருமகன் வாகீசன் பெற்றுக்கொண்டார். இலக்கிய ஆர்வலர்கள், உறவினர் நண்பர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் இந் நிகழிவில் பங்குகொண்டு சிறப்பித்திருந்தார்கள். திரு. மார்க் அவர்களின் நன்றியுரையோடு விழா இனிதே நிறைவு பெற்றது.

Book Release Photos: http://photos.tamil.com/SKathirkamanathans-Book/i-J4X92Lw

Share with your Friends: