uyir_01கனடிய தமிழ் மக்கள் மத்தியில் அபிமானம் பெற்ற நாடக நகைச்சுவை கலைஞரும், வானொலி நிகழ்சித் தயாரிப்பாளரும், ஒலிபரப்பாளருமாகிய “கணபதி ரவீந்திரன்” அவர்கள் கலை இலக்கியத் துறை சார்ந்து தனக்கிருக்கும் எழுத்தாற்றலை வெளிப்படுத்துவதற்கான முயற்சியில் காலடி எடுத்து வைத்துள்ளார். தொடர் வெளியீட்டை நோக்கமாகக் கொண்டு, காலாண்டுக்கு ஒருமுறை வெளிவரும் வகையில் “ஆயுத எழுத்து” என்ற தலைப்பிலான இதழை வெளியிடுவதற்கு முன்வந்துள்ளார். அவரது இலக்கிய ஆர்வத்துக்கும், முயற்சிக்கும் எமது பாராட்டுக்கள்.

“அயுத எழுத்து” இதழின் வெளியீடு, கடந்த 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று, ‘குயின்ஸ் பலஸ் பாங்குவற் ஹோல்’ இல் இடம்பெற்றது. கணபதி ரவீந்திரன் அவர்களின் நண்பர்கள், அன்பர்கள், ரசிகர்கள் இந்த வெளியீட்டு விழாவில் கலந்து சிறப்பித்திருந்தார்கள். அரசியல் துறை சார்ந்தவர்களான நீதன் சான், ராதிகா சிற்சபைஈசன் போன்றோரும், ஊடகத்துறை சார்ந்தவர்கள் பலரும் இதில் கலந்துகொண்டிருந்தார்கள்.

JJ printers உரிமையாளர் திரு.சோதி அவர்கள் விழாவிற்குத் தலைமை தாங்கி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். வழக்கறிஞர் தேவதாஸ் தம்பதிகள் குத்துவிளக்கேற்ற, ‘தளிர்’ இதழ் ஆசிரியர் சிவமோகன் அவர்களின் வரவேற்புரையோடு ‘நம்நாடு’ இதழின் ஆசிரியர் தீவகம் இராஜலிங்கம் அவர்களின் வாழ்த்துக் கவிதை ஆசீர்வாதமாய் அமைந்தது. நூல் பற்றிய சிறப்புரைகளும் இடம்பெற்றன. நாற்பத்து எட்டு பக்கங்களைக் கொண்ட ‘உயிர் எழுத்து’ இதழானது சிறுகதை, கவிதை, கட்டுரை, சிறு துணுக்குகள், சினிமா செய்திகள், கருத்து ஓவியங்கள் என்று பலசுவை இதழாக வெளிவந்திருக்கிறது.

வெளியீட்டு விழா இடம்பெற்ற அன்றய தினம்தான் கணபதி ரவீந்திரன் அவர்களின் பிறந்ததினம் என்பதால் அன்றைய விழா மேலதிக சிறப்பை பெற்ற ஒன்றாக அமைந்தது. பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டப்பட்டதோடு, வந்திருந்தவர்களுக்கு தாயக உணவு வகைகளில் ஒன்றான மரவள்ளிக் கிழங்கும் சம்பலும் வளங்கப்பட்டது வித்தியாசமான ஒரு விருந்தாக அமைந்தது.

Share with your Friends: